இலங்கையின் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்வதில் நீர், காற்று, நிலக்கரி, எரிவாயு என்பன பெரும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. நுரைச்சோலை அனல் மின் நிலையமானது கடந்த காலங்களில் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவும் மூன்று அலகுகளும் அடிக்கடி பழுதடைவதால் ஏற்படுகின்ற இழப்புக்களுக்காகவும் விமர்சிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், நுரைச்சோலை அனல் மின்நிலையம் 2016 ஜனவரி முதல் 2018 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 489 நாட்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததாக கணக்காளர் நாயகத்தின் விடே அறிக்கையொன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ‘லக்விஜய மின் நிலையமும் (நுரைச்சோலை அனல் மின் நிலையம்) அதன் செயற்பாடுகளும் சூழல் பாதிப்புக்களும்’ என்ற தலைப்பிலேயே விடே கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இம்மின் நிலையத்தில் மொத்தம் 900 மெகாவோட் மின்சாரத்தை வழங்கக்கூடிய மூன்று அலகுகள் மொத்தம் 352 நாட்கள் (முதலாம் கட்டம் 192 நாட்கள், இரண்டாம் கட்டம் 82 நாட்கள், மூன்றாம் கட்டம் 77 நாட்கள்) மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் மூடப்பட்டிருந்தது.
அதேநேரம் திருத்த வேலைகளுக்காக மின் நிலையம் 64 நாட்கள் மூடப்பட்டிருந்தது. மின் நிலையம் இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டதற்கு பிரதான பேணுதலையடுத்து அலகுகள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேல்கொள்ளப்படும் சோதனைக்காலம், உள்ளக குறைபாடுகள், வெளிக்குறைப்பாடுகள் மற்றும் முறைமை கட்டுப்பாடு ஆகியவை பிரதான காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளன.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவல் (PE/RTI/info/2019-009) பெறுகையில் 2018 ஆம் ஆண்டு நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதல் கட்டத்தில் 1563.173 ஜிகாவோல்ட், இரண்டாம் கட்டத்தில் 1647.304 ஜிகாவோல்ட், மூன்றாம் கட்டத்தில் 2088.846 ஜிகாவோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேவேளை, 2015 ஆம் ஆண்டில் 4443 ஜிகாவோல்ட் மின்சாரமும் 2016 இல் 5047 ஜிகாவோல்ட் மின்சாரமும், 2017 இல் 5103 ஜிகாவோல்ட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் லக்விஜய மின்நிலையத்தின் முகாமையாளர் அலுவலகத்தின் தகவல்களின்படி, 2015 இல் 4920.3 ஜிகாவோல்ட் மின்சாரமும், 2016 இல் 5575.5 ஜிகாவோல்ட் மின்சாரமும், 2017 இல் 5638.6 ஜிகாவோல்ட் மின்சாரமும் 2018 இல் 5299.3 ஜிகாவோல்ட் மின்சாரமும் 2019 (ஜனவரி தொடக்கம் மே வரை) 2574.1 ஜிகாவோல்ட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதில் பொருந்தாத்தன்மை காணப்படுகின்றது.
ஆனால் நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மின் பற்றாக்குறைகளின் போது நுரைச்சோலை அனல் மின் நிலையம் இயங்காமையும் பாரிய தாக்கத்தை செலுத்தியிருந்தது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு இறுதி வரையில் மின்சார கொள்வனவுக்கு பத்தாயிரம் கோடிக்கு மேல் அரசாங்கம் செலவிடவேண்டிய நிலை காணப்படுமென சூரிய மின்கல உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 2018 2021 வரை மின் நிலையம் மேற்கொள்ள வேண்டிய பேணல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி பராமரிப்புத் தேவைகளுக்காக முழுப்பிரிவும் 2019 ஆம் ஆண்டில் 100 நாட்கள் காலத்திற்காகவும் 45 நாட்கள் காலத்திற்காகவும் நிறுத்தப்படவேண்டுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை விற்பனை செய்வதன் மூலம் 2015 இல் 188,036 மில்லியன் ரூபாவும் 2016 இல் 206,892 மில்லியன் ரூபாவும் 2017 இல் 218,450 மில்லியன் ரூபாவும் 2018 இல் 229,354 மில்லியன் ரூபாவும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்திருக்கின்ற நிலையில், 2015 இல் 188,624.683 மில்லியன் ரூபாவும் 2018 இல் 229,556.744 மில்லியன் ரூபாவும் 2019 மே வரையான காலப்பகுதியில் 58,099.568 மில்லியன் ரூபாவும் வருமானமாக பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சாரம் பிறப்பித்தல் செயற்பாட்டின்போது குறைந்த கிரயத்தையுடைய தோற்றுவாய்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக அதிக விலையுடைய தோற்றுவாய்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையினால் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு இருந்ததுடன் இதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலையீடு அல்லது பரிசோதனை எதுவும் நடத்தப்பட்டிருக்கவில்லை. மாகாண சுற்றாடல் அதிகாரசபையினால் மின் நிலையத்திற்கு வெளியிடப்பட்டு இருந்த 22 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதிப்பத்திர புதுப்பித்தலின் போது அந்நிபந்தனைகளின் தேவைப்பாடுகள் அந்த மின் நிலையத்தினால் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததா எனவும் அதன் சரியானதன்மை பின்தொடர் நடவடிக்கை எடுத்தல் போதுமான அளவில் மேற்கொள்ளாமல் 2017 ஜூன் மாதம் 29 ஆம் திகதி வரை அவ் அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதன்படி, மின் நிலையத்தின் செயற்பாடுகளின் ஊடாக ஏற்படக்கூடிய சுற்றாடல் ஆபத்துக்கள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.
2017 ஜூன் 29 ஆம் திகதியிலிருந்து கணக்காய்வு தினமான 2018 மே 10 ஆம் திகதி வரை லக்விஜய அனல் மின் நிலைய செயற்பாடுகள் அனுமதிக்கப்பட்ட சுற்றாடல் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டிருக்கின்றது. 2017/2018 ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்பத்திரம் 2017 ஜூன் 14 ஆம் திகதி அனுப்பப்பட்டிருந்த போதும் 2018 மே 10 ஆம் திகதி வரை அது வழங்கப்பட்டிருக்கவில்லை.
குறிப்பிட்ட காலப்பகுதி செல்லத்தக்கதான சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இல்லாமலேயே மின்நிலையம் இயங்கி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மின் நிலையத்திலிருந்து வெளியாகும் எரிசாம்பல், அமச்சாம்பல் மற்றும் நிலக்கரி தூசு ஆகியவற்றை கட்டுப்படுத்த இலங்கை மின்சார சபை உரிய நடவடிக்கை எடுக்காததின் காரணமாக சூழல் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது.
2015 ஆம் ஆண்டு மொன்சூன் காலப்பகுதியில் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியவர்களுக்கு அரசாங்க அதிகாரசபைகளின் பரிந்துரையின்படி இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர உத்தியோகபூர்வமாக எவ்விதமான முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லையென (எஇஅ/ஈஎM/எNகீஃ/கீகூஐ)லக்விஜய மின்நிலையத்தின் முகாமையாளர் அலுவலகம் தெரிவித்திருக்கின்றது.
திட்டத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் போது உள்ளீடு செய்யப்படும் கழிவுகளின் அளவு மற்றும் அதன் தன்மை தொடர்பில் அறிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வறிக்கைகளை மாகாண சுற்றாடல் அதிகாரசபைக்கு வருடாந்தம் முன்வைக்கவேண்டி இருந்த போதிலும் இத்தேவைப்பாடுகள் முழுமையாக செய்யப்படவில்லை. என்பதுடன் அந்நிலை மாகாண சுற்றாடல் அதிகாரசபையினால் அவதானிக்கப்பட்டும் இருக்கவில்லை.
மின்நிலையத்தில் தற்போது இருக்கின்ற ஜெட்டி ஆனது தொடர்ந்து நீளத்தில் குறைந்து செல்வதன் காரணமாக ஜெட்டியில் இருந்து 4 கிலோமீற்றர் வரையான தூரத்தில் நிலக்கரியைக் கொண்ட கப்பல்கள் வருகை தராமையால் மேலும் அதிககாற்று வீசும் காலப்பகுதியில் கப்பல்கள் வருவதில்லை என்பதால் அக்காலப்பகுதிகளுக்கும் சேர்த்து நிலக்கரி களஞ்சியப்படுத்திக் கொள்ள வேண்டிய காரணத்தினால் தூசு பரவுவதும் அவதானிக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் மோசமான சூழல் பாதிப்பு ஏற்படுவதற்கு நிலக்கரியின் தரம் தொடர்பாக போதிய கவனம் செலுத்தப்படாதது முதன்மையான காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை 2015 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரியின் அளவு மற்றும் அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை என்பவற்றை அட்டவணை 01 இல் காணலாம்.
அதேவேளை லக்விஜய மின் நிலையம் (நுரைச்சோலை அனல் மின் நிலையம்) புத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும்கூட புத்தளத்திலுள்ள கிராமத்தவர்களுக்கு கூட 24 மணி நேர மின்சாரம் கிடைப்பதில்லையெனவும் கடலுக்கடியில் நிலக்கரி எவ்வாறு படிந்துள்ளது என்பதனை கண்டறிவதற்கு மொறட்டுவை பல்கலைக்கழகத்திடம் ஆய்வொன்றை நடத்துமாறு பலமுறை கேட்டுக்கொண்ட போதும் 2018 மே 10 ஆம் திகதி வரை அவ்வாறானதொரு ஆய்வு நடத்தப்படவில்லையெனவும் புகைகுழாய்கள் மூலம் வெளியேறும் காற்றின் தரத்தை சோதித்தல் மற்றும் அது தொடர்பான சத்தம், அதிர்வு மற்றும் நீரின் தரம் ஆகியவற்றை சோதிக்குமாறு கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோதும் எதிர்பார்க்கப்பட்ட மேற்படி சோதனைகள் 2018 மே 10 ஆம் திகதி வரை செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன்திட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையம் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கடன் செலுத்தப்பட்டு நாட்டு மக்களுக்கு நன்மைபயக்கும் வகையில் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் தொடர்ந்து மக்களுக்கும் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டுவருவதானது ஏற்றுக்கொள்ளமுடியாததாகும். மின்நிலையத்தின் செயற்பாடுகள் காரணமாக மீனவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அத்துடன் கரையோர அரிப்பைக் குறைக்கவும் கரையோரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின்படி இந்த மின்நிலைய திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமானது என்பதால் மேற்படி சூழல் பாதிப்புக்கள் குறைக்கப்பட்டு இந்த மின் நிலையம் செயற்படவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அசமந்த போக்குடன் செயற்படுகின்ற முகாமைத்துவம் மற்றும் பரிந்துரைகள் மற்றும் ஒப்பந்தங்களை முறையாக பின்பற்றாமை காரணமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்றிறன் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. அதேவேளை பராமரிப்புகளுக்காக கடந்த காலங்களில் 489 நாட்கள்வரை மின் நிலையம் மூடப்பட்டுள்ள நிலையிலும் எவ்விதமான செயற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டிருக்காத நிலையில் மக்களுடைய வரிப்பணமே விரையம் செய்யப்பட்டுள்ளது.