இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் என்பது இலங்கை அரசாங்கத்துக்கும் ,மக்களுக்கும் உரித்தான பாரம்பரியச் சொத்தாகும். அவ்வாறான ரூபவாஹினி நிறுவனத்தைப் பலப்படுத்தி இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டிய கடமை அரசாங்கத்தைச் சார்ந்துள்ளபோதும் அதனைச் செய்யத் தவறியதால் அந்த அலைவரிசை திசைமாறிய பறவையாக பாரத்துடன் பறக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் தேசியத் தொலைக்காட்சி சேவை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நிறுவப்பட்டது, தெற்காசியநாடுகளில் முதல் முறையாகத் தொலைக்காட்சி அனுபவத்தை ரூபவாஹினி அலைவரிசை ஊடாகப் பெற்றுகொண்ட இலங்கை மக்கள் இன்று அதன் பாரம்பரியத்தை மறந்து வெளிநாட்டு தொலைக்காட்சிகள் மீதான மோகத்தில் மூழ்கிக்கிடப்பது கவலைக்குரியதுதான்.
எவ்வாறாயினும்,தேசிய தொலைக்காட்சி என்னும் போது அதுநாட்டின் தேசியச் சொத்து என்பதால் அதற்கிருக்கும் மதிப்பில் எந்தக் குறைபாடுகளும் ஏற்படவில்லை. அவ்வாறிருக்க அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தேசிய தொலைக்காட்சி சேவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலொன்று நெருங்கிவரும் போது ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட குறித்த தீர்மானம் அரசியல் வட்டாரங்களுக்குள் பெரும் அதிருப்தியை எடுத்தியிருந்தது. இது தொடர்பாக ஊடகச் சந்திப்பொன்றை நடத்திய ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜயவர்தன, ஜனாதிபதியின் மேற்படிச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்திருந்ததுடன், 2014 ஆம் ஆண்டுக்குப் பின்பே ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்க ஆரம்பித்ததெனவும், 2018 ஆம் ஆண்டளவில் அந்தநிலைமை மேலும் உக்கிரமடைந்தது என்றும் தெரிவித்திருந்தார்.
மேற்படி கூற்றின் உண்மை நிலைவரம் குறித்து ஆராய்வதாகவும்,தேசியச் சொத்தான ரூபவாஹினி நிறுவனம் நட்டமடைந்து செல்வதற்கான காரணங்களையும் தேசிய கணக்காய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளிலுள்ள தரவுகளையும் தொகுத்து இக்கட்டுரை எழுதப்படுகிறது.
இந்தத் தொலைக்காட்சிச் சேவையானது பொது நிதியில் நடத்தப்பட்டுச் செல்வதால், அந்த நிறுவனத்திடமிருந்து அதற்கு நிகரான வருமானத்தைத் திறைசேரி எதிர்பார்க்கும் பட்சத்தில் அந்த வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இயலுமையைத் தேசிய தொலைக்காட்சி இழந்துள்ளமையே மேற்படி பிரச்சினைகளுக்குக் காரணமாகியுள்ளதென அறியமுடிகிறது.
கணக்கீட்டுக் குறைபாடுகள்
2011 கணக்காய்வு அறிக்கையின் பிரகாரம், 2010 டிசெம்பர் 31 ஆம் திகதி மதிப்பிழந்த 469,815 ரூபாய் பெறுமதியான 130 காசோலைகளுக்கு மாற்றீடாக புதிய காசோலைகள் வழங்கப்பட்டிருக்காததுடன் கடன் பட்டோரால் கடன் வழங்கப்பட்டுள்ள காசோலைகள் இரத்துச் செய்யப்பட்டவையாகக் காணப்பட்டுள்ளன.
அந்தக் காசோலைகளில் காசோலைகளுக்கான தொகை, 132,811 ரூபாயாகவும், அவை 2006 -2009 வரையான காலத்துக்குரியவையெனவும் தெரியவந்துள்ளது.
பெறவேண்டியிருந்த கணக்குகள்
கூட்டுத்தாபனத்தின் சேவை நாடி கடன்பட்டோரின் தொகை சுமார் 596 மில்லியன் (596,893,398/=) ரூபாயாகக் காணப்பட்டதுடன், அதனை செலுத்தும் காலம் ஒரு மாதத்துக்கு வரையறுக்கப்பட்டிருந்ததாகவும், ஒருமாதத்துக்கும் மேலாக 73 பேர் கடன் செலுத்தாமல் இருந்ததுடன், 32 பேர் மூன்று மாதங்களுக்கும் மேலான கடன்களை செலுத்தாதிருந்துள்ளனர். இவர்களிடமிருந்து பெறப்படவேண்டிய தொகை சுமார் 14 மில்லியன் (14,079,658/=) ரூபாயாகவும் காணப்பட்டுள்ளது.
அத்தோடு, சில நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ள முன்னர் விளம்பர அனுபந்தங்களை வழங்கியுள்ளதுடன் அந்த நிறுவனங்களிடமிருந்து கடனை அறவிடாமல் 2007,2008 ,2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், மீண்டும் விளம்பர அனுபந்தங்களை வழங்கியமையால் 49 மில்லியனுக்கும் கிட்டிய தொகைக் கடன் மீளப்பெறப்படாமல் இருந்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு மேலாக தனிநபர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தொகை 219,215 ரூபாயாகக் காணப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருந்து அறவிடப்படவேண்டியதொகை சுமார் 6 மில்லியன் (6,482,135/=) ரூபாயாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து அறவிடப்பட வேண்டிய தொகை சுமார் 17 மில்லியன் (17,858,971/=) ரூபாயாகவும் காணப்பட்டுள்ளது. அதற்கு மேலாக, மருத்துவப் பட்டியல்களின் மீளாய்வின் போது, காப்புறுதிக் கம்பனியிடம் இருந்து சுமார் 1 மில்லியன் (1,111,780/=) ரூபாய் அறவிடப்பட வேண்டியிருந்தது.
முற்பணம் வழங்குதல்
கணினி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் தொடர்புபட்ட 2 விடயங்களுக்காக 2008 ஆம் ஆண்டின் போது ஒப்பந்தக்காரர்களுக்கு 858,000 ரூபாய் வழங்கப்பட்டிருந்தாலும் அந்தச் செயற்பாடு முறையாகப் பூர்த்திசெய்யப்படவில்லை எனவும் கணக்காய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செலுத்தப்பட வேண்டிய கணக்குகள்
கூட்டுத்தானம், 5 வருடங்களுக்கு மேலாகச் செலுத்தாமல் இருந்த கடன் தொகை சுமார் 12 மில்லியன் (12,468,340/=) ரூபாயாகக் காணப்பட்டுள்ளதுடன், 83,572 ரூபாய் கடன் 10 வருடங்களுக்கு மேலாக செலுத்தப்படாமல் இருந்துள்ளது. அத்துடன் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு 2006 முதல் 2009 ஓகஸ்ட் மாதம் வரை 265,481 ரூபாய் மீளச் செலுத்த வேண்டியிருந்த போதிலும், அவை செலுத்தப்படாத நிலையில் இருந்துள்ளது.
கணக்காய்வுக்கான சான்றின்மை
கணக்காய்வுக்கு கோரப்பட்டிருந்த, சேவைநாடுநர் விவரம், பாதுகாப்புப் பிணை, சம்பளவிவரம், கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நிலையங்கள் உள்ள காணிகளின் உரித்து, கையளிப்புப் பத்திரம், வர்த்தமானி அறிவித்தல் ஆகியவை கணக்காய்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோதும் அவை திருப்தியளிப்பதாக இருக்கவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டவிதிகளுக்கு இணங்காத செயற்பாடுகள்
2010 ஆம் ஆண்டின் போது இலங்கை வங்கியில் முதலீடு செய்யப்பட்ட 22 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிலையான வைப்புக்காக திறைசேரியின் அங்கிகாரம் பெறப்படாமை, கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுத் தர, பதவிநிலைகளில் உள்ள உத்தியோகத்தர்கள் வருடாந்த சொத்துகள்,பொறுப்புகள் கூற்றுகளை சமர்ப்பிக்க வேண்டிய போதிலும் உரிய 91 உத்தியோகத்தர்களில் 34 பேர் மாத்திரமே சொத்துகள்,பொறுப்புகள் கூற்றுகளைச் சமர்ப்பித்திருந்தமை உள்ளிட்ட காரணங்களும் கணக்காய்வில் தெரியவந்துள்ளன.
வழக்குகள்
2010 ஆண்டில் கூட்டுத்தாபனத்துக்கு எதிராக வெளித்தரப்புகளால் தொடரப்பட்ட 08 வழக்குகளுக்கு உரிய 8 முறைப்பாட்டாளரால் கோரப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகை சுமார் 1 பில்லியன் (1,072,500,000/=) ரூபாய் ஆகவும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தால், வெளித்தரப்புகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட 18 வழக்குகள் வாயிலாக சுமார் 21 மில்லியன் (21,175,516/=) ரூபாயைக் கோரியுள்ளது. அவற்றில், 04 வழக்குகள் பூர்த்தியாகியிருந்த போது, 1 மில்லியன் (1,256,562/=) ரூபாய் கூட்டுத்தாபனத்தால் அறவிடப்பட்டிருந்தது.
சிக்கனமின்மை
மக்கள் தொலைக்காட்சி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக 2009 செப்டெம்பர் மாதம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள வீடொன்றுக்கு, புனரமைப்பு, ஏனைய செலவினமாக 604,998 ரூபாயும் வாடகையாக 29,585 ரூபாயும் செலுத்தப்பட்டிருந்த நிலையில், அதனைக் கொண்டு எந்தவித பயன்பாடுகளையும் அடையவில்லையெனக் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வளப் பயன்பாடு
தொலைக்காட்சி ஒலி, ஒளி நூலகத்தின் நடவடிக்கைகளை முறையாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்கு அந்தக் கட்டமைப்பைக் கணினி மயப்படுத்தும் நோக்கில், சுமார் 2 மில்லியன் (2,055,502/=) ரூபாய் செலவில் 2005 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட தன்னியக்க “பார்கோட்” முறைமை மற்றும் இலத்திரனியல் கெசட், பாதுகாப்பு முறைமை என்பன 2010 ஜூலை மாதம் முடிவிலும் பயன்படுத்தப்படாமலேயே இருந்துள்ளது.
இனங்காணப்பட்ட நட்டங்கள்
2014 டிசெம்பர் மாதத்தில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கும் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட வாய்மொழி மூல இணக்கப்பாட்டுக்கமைய அலைவரிசைக் காலத்தை வழங்குவதற்காக 10 மில்லியன் ரூபாய் கொடுக்கல் வாங்கல் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன் கீழ் கூட்டுத்தாபனத்தால் வீத அட்டை விலைக்கு அமைய சுமார் 20 மில்லியன் (20,849,000/=) ரூபாய் பெறுமதியான அலைவரிசைக் கட்டணம் அறவிடப்படாது 05 செக்கன்கள் கொண்ட திரைக்குக் கீழான 190 அறிவித்தல் விளம்பரங்களும் 45 செக்கன்கள் கொண்ட திரைக்குக் கீழான 56 அறிவித்தல் விளம்பரங்களும் வழங்கப்பட்டிருந்தன.
இருப்பினும், இக்கொடுக்கல் வாங்கல்களுக்காக எழுத்துருவில் அமைந்த உடன்படிக்கையொன்று இல்லாமையால் மீளாய்வாண்டின் இறுதிவரையிலும், மேற்குறித்த தொகையை அறவிடவோ,சேவை பெறுநருக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கூட்டுத்தாபனத்துக்குத் தொழில்நுட்ப உதவியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்கையில் அவர்களால் ரூபா 150,000க்குச் சமமான பிணை முறி உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட வேண்டுமென்பதுடன், அதற்கு மேலதிகமாக இரண்டு நபர்கள் பிணைவைக்க வேண்டியது அவசியம் என்ற நிலையில், அந்தப் பிணைமுறிப் பெறுமதி ஊழியர்களிடமிருந்து தவணைப்பணமாக அறவிடப்படுவதுடன், 2005 முதல் 2015 ஆம் ஆண்டுவரை அவ்வாறு ஆட்சேர்க்கப்பட்ட 06 தொழில்நுட்ப உதவியாளர்கள் உடன்படிக்கைக் காலம் முடிவடைவதற்கு முன்னர் பதவிவிலகிச் சென்றிருந்ததுடன் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டியிருந்த 435,684 ரூபாயை பிணைதாரர்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை என 2014 ஆம் ஆண்டு கணக்காய்வின் போது தெரியவந்துள்ளது.
காணி கையேற்பு
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்ட 1982 ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 35 ஆண்டுகளாக அதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கொழும்பு 07 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அமைந்துள்ள 08 ஏக்கர் விஸ்தீரமானதும் அதியுயர் பெறுமதியுடையதுமான காணி, கட்டடத்தின் சட்டரீதியான உரித்தைக் கூட்டுத்தாபனத்தின் வசமாகப் பெற்றுகொண்டு, அதன் நிதிக் கூற்றுகளில் அந்தத் தரவுகளை வெளிப்படுத்தத் தவறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு
கூட்டுத்தாபனத்தின் அங்கிகரிக்கப்பட்ட பதவியணியினர் எண்ணிக்கை 985 ஆகக் காணப்படுவதோடு, அதில் 573 பதவிகள் நிரந்தரமானவையாகவும், ஒப்பந்த அடிப்படையில் 66 பேரும் இருந்ததுடன் நிரந்தரப் பதவிகளுக்கான 381 வெற்றிடங்களும் இருந்துள்ளன.
2011ஜூன் 30 ஆம் திகதி அங்கிகாரம் பெறப்படாத 03 பதவி நிலைகளுக்காக 17 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர் அத்துடன், 2017 கணக்காய்வின் போது 08 பதவிகளுக்காக அங்கிகரிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக 35 நபர்களுக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி பதவிகளுக்காகப் பதில் உத்தியோகத்தர்கள் இருக்க முடியாத நிலை காணப்படும் போதும் 5 பதவிகளின் கீழ் 7 உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படுள்ளனர்.
மேலும், கூட்டுத்தாபனத்தால் பதவியணியினர் அங்கிகரித்துக் கொள்ளப்பட்ட கடிதத்திலுள்ள அறிவுறுத்தல்களுக்கு முரணாக 1982 இன் 06 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரச்சட்டத்தின் (3)(1)(அ) பிரிவுக்கு உட்படாத செயற்பாட்டுப் பணிப்பாளர் பதவிக்காக அதிகாரச் சட்டத்தை மீறும் வகையில் அப்போதைய அமைச்சரால் 2017 ஜூன் 23 ஆம் திகதி நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு 415,534 ரூபாயை சம்பளமாக வழங்கியுள்ள கூட்டுதாபனம், மேலதிகமாக மாதத்துக்கு 150 லீற்றர் எரிபொருள் வழங்க இணங்கியிருந்தமைக்கு அமைவாக 06 மாதங்களுக்கு 900 லீற்றர் எரிபொருளுக்குப் பதிலாக 1,177 லீற்றர் எரிபொருளும் வாகனமொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2017 ஜனவரி முதல் ஜூன் வரை அங்கிகாரமின்றி நியமிக்கப்பட்டிருந்த செயற்பாட்டுப் பணிப்பாளருக்கு மாதாந்தச் சம்பளம், தொடர்பாடல் கொடுப்பனவாக, 314,494 ரூபாயும், ஒரு வாகனமும் அதற்காக 1,205 லீற்றர் எரிபொருளும் வழங்கப்பட்டிருந்தமையும் 2017 கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
சந்தைப் பங்கு
2017 ஆம் ஆண்டுக்காக “வரையறுக்கப்பட்ட இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியக” கம்பனியால் 13 தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரசிகர்கள் தொலைக்காட்சி பார்க்கும் அளவு தொடர்பான ஆய்வின் போது, 2017 ரூபவாஹியைப் பார்வையிடுவோர் அளவு 3.4 சதவீதமாகக் காணப்பட்டுள்ளதுடன், அவ்வருடத்தின் டிசெம்பர் மாதமளவில் 4.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும் முன்னைய வருடங்களான 2015,2016,2017 களில் அந்த தொகை 6.7 வீதமாகக் காணப்பட்டுள்ளதுடன், 2014 ஆம் ஆண்டுமுதல் அது தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன் சந்தைப் பங்கைப் பலப்படுத்த உபாய முறைகள் கையாளப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
வாகனப் பயன்பாடு
கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 47 வானகங்கள் 10 வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளதுடன், அவற்றில் ஒரு வாகனம் 115,800 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு, இவ்வாறே பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்களை முறையாக அகற்றியிருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
நிலைபேறான அபிவிருத்தி
நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான ஐ.நா சபை பிரகடனத்துக்கமைய எந்தச் செயற்பாடுகளும் முன்னெடுக்க பட்டிருக்கவில்லை என்பதும் மறு முனையில் நட்டங்களைத் தவிர்ப்பதற்கு வழங்கப்பட்ட கணக்காய்வுப் பரிந்துரைகளையும் நிறுவனம் நடைமுறைப்படுத்தி இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 2014 , 2015 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள் 2018 ஏப்ரல் வரையிலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறன பல குறைபாடுகள் அவதானிக்கப்பட்டு பலமுறை உரியதரப்புகளுக்குக் கணக்காய்வுத் திணைக்களம் அறிவுறுத்திய போதும் அதனைப் பொருட்படுத்தாத நிலையிலேயே ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்கிவந்தமை கணக்காய்வுத் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனவே எதிர்காலத்திலாவது நாட்டு மக்களின் சொத்தான இந்த கூட்டுத்தாபனத்தை வளப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள எத்தனையோ அரசநிறுவனங்கள் முறையாகவும் மக்களின் சேவையை மனதில் கொண்டு செயற்படுவதை மறுக்க முடியாததாயினும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அசமந்தப் போக்கைத் தொடர்ந்து கண்டுக்கொள்ளாமல் இருப்பது இந்நாட்டு மக்களின் சாபக்கேட்டுக்கு
ஆளாக வேண்டிவரும்.